Saturday, September 25, 2010

நண்பேண்டா

அனைவருக்கும் வணக்கம் ...

ரொம்ப நாளா இந்த பக்கமே வரமுடியல... வேலை பளு மற்றும் சில பல காரணங்களால தடைகள்...

நான் இப்ப பகிர்ந்துக்கொள்ள  போவது என்னோட பள்ளிகூடத்துல நடந்த ஒரு சுவாரசியமான என் வாழ்க்கைல மறக்கவே முடியாத ஒரு சுவையான நிகழ்ச்சி.
அப்ப நான் பதினோரம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன்,  காலாண்டு பரீட்சை துவங்கியாச்சு, எனக்கு ரொம்பவும்  கஷ்டமான பாடம் அப்படினா அது வேதியியல் தான்.. எனக்கு சுட்டு போட்டாலும் அதுல ஒன்னுமே மனசுல பதியவில்லை ..  சரி பரீட்சை அறைக்குள்ள வந்தாச்சு இனிமே என்னப் பண்றது அப்ப தான் என்னோட அடுத்த வரிசை எண் நண்பன் ஒரு யோசனை சொன்னான்.. அது புஸ்தகத்த பக்கத்துல வச்சுக்கிட்டு எழுதுவது 

இந்த நேரத்துல அந்த நண்பனை பற்றி நான் கட்டாயம் சொல்லியாகனும் ... அவனை பற்றிய ஒரு முன்னுரை...அவனோட பெயர்  வேண்டாமே   .. அவனுக்கு  இப்ப தான் கல்யாணமாகிருக்கு .. பாவம் அவனோட மனைவி இத படிச்சா அவனுக்கு  கஷ்டம்... :D

அவன் சொன்ன யோசனைல அவனோட சுயநலமும் என் மூலமா பண்றதுல ஒரு பாதுகாப்பும் இருந்தது...

சரி இப்ப கதைக்கு வருவோம்..... அவன் சொன்ன யோசனை புஸ்தகத்த பரீட்சை அறைக்குள்ள எடுத்துட்டு போய் எழுதுவது...  நான் அப்ப இருந்த மனநிலைல சரி பண்ணிடலாம் அப்படின்னு எடுத்துட்டும் போயாச்சு...

பரீட்சை துவங்கி நான் புஸ்தகத்த தொறந்து எழுதவும் துவங்கியாச்சு... இதுக்கு நடுல அந்த அறை  மேற்பார்வையாளர் பற்றி ஒரு சிறு குறிப்பு... அவர் ரொம்ப நல்லவர் அதனால ரொம்ப வெகுளியும் கூட .... அவர் கருத்தோட தூங்க ஆரம்பிச்சுட்டார்... அதனால எனக்கு பெருசா பயம் வரல...

நேரமாக நேரமாக அந்த நண்பனுக்கு பொறுமை இல்ல..  எங்களோட உடன்பாடு படி நான் எழுதிமுடிச்சவுடனே  நான் அவனுக்கு புஸ்தகத்தை கொடுத்துவிட வேண்டும் என்பது ... ஆனாலும் அவனுக்கு இருப்பு கொள்ளவில்லை  என்னை நச்சரிக்க ஆரம்பிச்சுட்டான்... ... போடா தொலையுதேன்னு அவனிடம் புஸ்தகத்த கொடுத்ததும் விட்டேன்... இப்ப தான் கதைல ஒரு திருப்பம்...

என்  நண்பன் உடகார்ந்திருந்த மேஜை வெளிப்புற மேற்பார்வையாளர் ஒருவரின் கண்ணுக்கு அகப்படும் இடத்துலயும் இருந்தது ... இதை அந்த நன்ம்பான் கவனிக்க தைரியத்தின் விளைவு அவர் இதை ஜன்னல் வழியே பார்த்து எங்கள் அறைக்குள்ளே வந்து அவன் கையும் களவுமாக பிடித்து விட்டார்... இவன் சோழ பொறியில் சிக்கிய எலி மாதிரி திரு திருன்னு முழிக்க அதுக்குள்ளையும் தூங்கி கொண்டிருந்த எங்கள் ஆசிரியரும் எழுந்துவிட இவனுக்கு மண்டகப்படி ஆரம்பமானது...  ..

நான் முன்ன பயந்த படியே அவன் என் பெயரையும் போட்டு கொடுத்துவிட்டான். இத கேட்டவுடனே எனக்கு அப்டியே மின்சாரம் பாய்ந்தது போல் ஒரு வித நடுக்கம். இருந்தாலும் முகத்துல அத காமிச்சுக்கல ... இப்பக்கதைல இன்னுமொரு திருப்பம்... அது நானே எதிர்பாரத திருப்பம்

என்னோட பெயரை சொன்னவுடனே எங்களுடைய அறையின் ஆசிரியருக்கு இன்னும் கோபம் வந்து விட்டது ... போச்சு இன்றைக்கு நாமும் தொலைஞ்சோம் அப்டின்னு நினைக்கும் போதே அவனுக்கு பளார் பளார் அப்டின்னு இன்னும் ரெண்டு சேந்து விழுந்ததோட இல்லாம ...எனக்கு பாலாஜிய பத்தி சின்ன வயசுலருந்தே தெரியும்.... அவன் ரொம்ப நல்ல பையன் உன்ன பத்தி இந்த பள்ளிக்கூடத்துல எல்லாருக்கும்  தெரியும் நீ எவ்ளோ கேப்மாரி அப்டின்னு சொல்லி மண்டகப்படி இன்னும் தீவிரமா ஆகிடுச்சு இதுல இன்னொரு  விஷயம் இவன் புஸ்தகத்த பாத்து எழுதுறதக் கண்டுப்பிதுச்சது  அதே வேதியியல் ஆசிரியர் தான் 

இதுக்கு நடுல அந்த நண்பன் என்ன பரிதாபமா ஒரு பார்வை பாத்தான் ... எனக்கு சிரிப்ப அடக்கவும் முடியல அதே நேரத்துல இப்படி ஒரு பெரிய தவறா பண்ணிட்டோமே அப்படினும் எனக்கு ஒரே பீலிங்க்ஸ் வேற அந்த ஆசிரியர் என் மேல வச்சுருந்த அந்த ஒரு நன்மதிப்ப நான் இப்படி சீர்கொலச்சுட்டேனே அப்டின்னு எனக்கு ரோம்பாயும் மனசு கஷ்டமா போச்சு...

அன்னைக்கு வீட்டுக்கு வந்தோடனே என் அம்மாகிட்ட எல்லாத்தையும் சொல்லிட்டேன் ... எங்க அம்மாவும் ஒரு ஆசிரியை... அம்மாவும் என்கிட்டே சரி விடு ... எப்ப உனக்கே நீ செஞ்சது தப்புன்னு தோனித்தோ அப்பயே எல்லாம் முடிஞ்சு போச்சு இனிமே இந்த தப்ப திரும்பயும் பண்ணாத அப்டின்னு சொன்னங்க..

இத நான் பகிந்துக்கொள்வதற்கு முக்கிய காரணம் ... 10 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு  அந்த  நண்பன சென்ற வருடம் சந்திச்சேன் அப்ப இந்த நிகழ்ச்சிதான் எனக்கு ஞாபகம் வந்தது... இத அவன்கிட்ட பகிர்ந்துகும் போது அவன் டேய் இதுலாம் இன்னும் ஏன்டா ஞாபகம் வச்சு அத என்கிட்டே சொல்லி என்ன கொடும படுத்துற அப்டின்னு சொன்னான் இருந்தாலும் பசுமரத்தாணி போல் என் நினைவில் நின்ற இந்த வரலாற்று நிகழ்ச்சிய  பதிவு பண்ணி வச்சுக்க வேணாமா என்ன நீங்களே சொல்லுங்க...